Saturday, January 30, 2021

வலையமைப்பின் வலிகள்






ஓ! மனிதனே!....
கேட்டுக்கொள்.
வலையமைப்பில் சிக்கி
சின்னாபின்னமான
மனிதங்களைப் பற்றி....

ஓ! மனிதனே!......
கேட்டுக்கொள்.
இணையப் பாவணையால்
இணைப்பறுந்து போன
எம் உறவுப் பாலங்களைப் பற்றி...

ஓ! மனிதனே!.....
கேட்டுக்கொள்.
பற்றியத்தைப் பற்றியதால்
பைத்தியம் பிடித்தவர்கள் பற்றி......

ஓ! மனிதனே!....
கேட்டுக்கொள்.
கீச்சகம் - எம்முள்
கிழித்தெறிந்த பக்கங்களைப் பற்றி.....

ஓ! மனிதனே!.....
தெரிந்துகொள்.
வலையமைப்பு என்பது
பாதுகாப்பானது அல்ல;
வஞ்சகர் சூழ்ச்சியின்
விஸ்வரூபமும் என்பதை....


தமிழும் தவமும்

 தலைப்பு சற்றே வித்தியாசமாகத் தோன்றலாம் இருப்பினும் உண்மை அதுவல்லவோ....

ஆம், தமிழன் என்று சொல்வதில் நாம் எத்தகைய பெருமையை அடைகின்றோமோ அதைவிட வேற்று மொழியினர் தமிழைக் கற்பதில் உவகையும் பெருமையும் அடைகின்றனர். உலகம் முழுதும் தமிழனை அழிக்க நினைத்தவர்களுக்கு தமிழ், தான் அழிவதில்லை என்று எதிரே சம்மணமிட்டு அமர்கின்றது. 

தமிழ் இன்று சம்மணமிட்டு அமர அன்று முதல் இன்று வரை எத்தனையோ பண்டிதர்கள் , கவிஞர்கள்,  புலவர்கள் சித்தர்கள் முதல் தமிழன் என்கின்ற சாதாரண மனிதன் வரை தம்முடைய கடமையைச் செவ்வனே செய்திருக்கின்றார்கள். 

அந்தவகையில் அறியப்பட்டவனே பாரதி... சுப்பிரமணிய பாரதி... 

ஒரு கவிஞன் அதுவும் மகாகவி அவரை எவ்வாறு ஒருமையில் அழைக்கின்றேன் என எண்ணத்தோன்றும் உங்களுக்கு. ஆம் அவன் ஓர் கவிஞன்.... அதுவும் புரட்சிக் கவிஞன்.... அவன் புரட்டிப் போடாத பக்கங்கள் இல்லை என்று அவன் பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஆராய்கின்றனர்..... பட்டங்களும் பெறுகின்றனர்.....  இவன் மட்டுமல்ல தமிழில் இராமாயணம் தந்த கம்பனும் மகாபாரதம் தந்த வியாசரும் கூட தமிழை இலகுவில் பெற்றுவிடவில்லை. தவமிருந்து பெற்றார்கள் தமிழை..... அதனால்தானோ என்னவோ தரம் மிகுந்த இலக்கியங்கள் படைத்தார்கள்.... 

அகத்தியன் முதல் கொண்டு இளங்கோ துணைக்கொண்டு தமிழவள் நடை போட்டாள்....  தரணி எங்கும்....

திருவாசகத்தோடு திருக்குறளும் இணைந்தால் மறுவாசகம் தேவைப்படுவதில்லை... தமிழ் என்றும் வீழப்போவதில்லை.... வேற்றுமொழியின் ஆக்கிரமிப்பில் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்றான்  சாக விட்டுவிடக்கூடாது என்கின்ற எதிர்பார்ப்பில்..... சுதந்திரத்தை எதிர்நோக்கி  காலடி எடுத்துவைத்தான் தமிழ் தன்னுடன் இருக்கின்றாள் என்று.... இவன் சுதந்திரம் என்கின்ற பலனை வேண்டி கவிகள் என்ற மலர்களை தூவித்தூவி தவம் செய்தான் தமிழன்னையை நோக்கி..... 

இவன் தவம் இருந்தது என்னவோ சுதந்திரம் நோக்கி இருப்பினும் அவன் அடைந்தது தமிழ் என்னும் அட்சயபாத்திரத்தை..... 

தீ ஆகக் கனன்றவன்  பாரதி ஆனான்.....

தவமிருந்து பெற்ற தமிழால் புரட்சிக்கவி என்றும் மகாகவி என்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் சுப்பிரமணியன்...... பாரதி எனும் நாமம் கொண்டு....... 

தமிழனாககப் பிறந்தால் மட்டும் 

தமிழ் சுலபமாகக் கிடைத்து விட மாட்டாள்.....

தவம்  இயற்றுங்கள்........ 

தரணி நாளை உங்கள் பெயர் சொல்லும்.........